மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வாகனத்தில் மோதி சிறுத்தை குட்டி பலி

1 Min Read

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷானன் தோட்டப் பகுதியில், வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில் அரிய வகை மலைச் சிறுத்தை குட்டி ஒன்றின் உடல் நேற்று (29) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்துள்ளார்.

ஷானன் தோட்டப் பகுதியில் வீதியோரமாக சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள், அது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டு நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:

“குறித்த தேயிலைத் தோட்டப் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த மலைச் சிறுத்தை குட்டி, இரவு வேளையில் இரையைத் தேடிக் கொண்டு வீதியைக் கடக்க முயன்றிருக்கலாம். அந்தச் சந்தர்ப்பத்தில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியால் பயணித்த அடையாளம் தெரியாத வாகனமொன்றில் மோதியதாலேயே இது உயிரிழந்திருக்கலாம் என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் வாகன விபத்துக்களினாலும், சட்டவிரோதக் கம்பிக் கண்ணிகளினாலும் அரிய வகை மலைச் சிறுத்தைகள் தொடர்ச்சியாகப் பலியாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *