தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கருகே இன்று (27) அதிகாலை 12.45 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தியத்தலாவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இ.போ.ச. சொந்தமான பேருந்து, அதிகாலை 12.45 மணியளவில் தியத்தலாவை கல்கந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த பள்ளத்தில் புகையிரத பாதையில் பாய்ந்துள்ளது.
”பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ் கவிழ்ந்துவிட்டது” என்று விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய பயணி ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கவிழ்ந்த பஸ்ஸினுள் சிக்கியிருந்தவர்களை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து மீட்டனர்.
சாரதியின் தூக்கக் கலக்கம் மற்றும் வேகமே இந்த விபத்துக்கு பிரதான காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் இவ்வாறான விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து தியத்தலாவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




