சிங்கப்பூரில் அண்மையில் நடந்த ‘ஷாங்ரி-லா கலந்துரையாடல்’ மாநாட்டில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆசிய நாடுகளுக்கு வழங்கிய நேரடி மற்றும் முக்கியச் செய்தி முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்கா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை விட்டு வெளியேறப் போவதில்லை. ஆனால், ஆசிய நாடுகளின் பாதுகாப்புச் சுமையை இனி அமெரிக்கா தனி ஒருவனாகத் தாங்கத் தயாராக இல்லை. ஆசிய நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருந்து கொண்டு, தங்களின் சொந்த இராணுவப் பங்களிப்பைக் குறைவாகக் கொடுக்கும் பழைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுக்குத் தேவை தங்களைச் சார்ந்து வாழும் நாடுகள் அல்ல , மாறாக சமமான பலமுள்ள கூட்டாளிகளே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் சீனாவுடனான உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆசியாவில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு தொடரும்.ஆனால், அது இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் சமமாக இருக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தையோ அல்லது கடல்சார் ஒழுங்கை ஒரு தனி நாடு தன் கட்டுப்பாட்டில் எடுப்பதையோ அமெரிக்கா அனுமதிக்காது. இதற்காக, வெறும் வார்த்தைகளால் மிரட்டாமல், சர்ச்சைக்குரிய பகுதிகளில் (குறிப்பாக தென்சீனக் கடல் மற்றும் ஃபர்ஸ்ட் ஐலேண்ட் செயின்) எதிரிகள் எளிதாக இராணுவ வெற்றியைப் பெற முடியாதபடி கூட்டுப் பாதுகாப்பு, நவீன தளவாடங்கள் மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா பலப்படுத்தி வருகிறது.
இனிமேல் வெறும் நட்பு என்ற பாசத்தின் அடிப்படையில் ஆசிய நாடுகளை அமெரிக்கா அணுகாது. எந்த நாடுகள் அதிக இராணுவப் பங்களிப்பை வழங்கி, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறதோ, அவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களின் பாதுகாப்புப் பட்ஜெட்டை உயர்த்தி அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன. ஆனால், எச்சரிக்கையோடு நடுநிலை வகிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது பெரிய சவாலாக மாறும்.
இன்றைய பாதுகாப்பு என்பது வெறும் இராணுவத் தளங்களை மட்டும் சார்ந்தது அல்ல. விநியோகச் சங்கிலி , செமிகண்டக்டர்கள், கடலுக்கடியில் உள்ள இணையக் கேபிள்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் தற்காப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆசிய நாடுகள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார ரீதியாக சீனாவின் சந்தையை விரும்புகின்றன, ஆனால் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றன. அதே நேரத்தில் பாதுகாப்புக்காக அமெரிக்காவை விரும்பினாலும், அமெரிக்காவின் அரசியல் பகடைக்காயாக மாறவும் அவை விரும்பவில்லை. ஆனால், வெறும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மட்டும் தங்களைப் பாதுகாக்காது, தங்களின் சொந்தப் பாதுகாப்புத் திறனை உயர்த்த வேண்டும் என்ற நிதர்சனத்தை அமெரிக்கா அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.
அமெரிக்கா ஆசியாவில் தொடர்ந்து இருக்கும், ஆனால் புதிய நிபந்தனைகளுடன் இருக்கும். ஆசியாவின் அமைதியை விரும்பும் நாடுகள், தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கான செலவுகளையும் பொறுப்புகளையும் தங்களின் தோள்களில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடாகும்.




