அதிகரித்துவரும் டெங்கு ஆபத்து; 14 மாவட்டங்களில் 538 கிராம சேவகர் பிரிவுகள் அதிஅபாயமாக பதிவு

1 Min Read

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஜூன் மாதத்தில் இதுவரை 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 14 மாவட்டங்களுக்குட்பட்ட 331 சுகாதார அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த டெங்கு நோயாளர்களில் 51.90 சதவீதமானோர் மேல் மாகாணத்திலும் 16.18 சதவீதமானோர் தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் 9,983 நோயாளர்களும் கம்பஹாவில் 8,809 நோயாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 3,446 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கவனத்திற்கொண்டு, ஜூன் மாதத்திற்கான விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிக அவதானமிக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் பட்டியலை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் அதிக அவதானமிக்க மொத்தம் 14 மாவட்டங்கள், 331 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள இந்த பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசேட ஆய்வுகள், புகையூட்டல் நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *