33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரிகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியம் நாய்

2 Min Read

கடந்த 33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரிகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியம்.

இன்று கிழக்கில் பேசுபோருளாக விளங்கும் அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது.

இன்னும் சொல்லப்போனால் பாதயாத்திரீகர்களை விட சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக வருகின்றது. இதனால் சுப்ரமணியம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றான்.

பாதயாத்திரை குழு தலைவர் ஜெயாவேல் சாமியிடம் இந்த நாய் பற்றி கேட்ட பொழுது..

”நாங்கள் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று என்ற இடத்தில் வரும் பொழுது இந்த நாய் தானாகவே வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டது. அந்த நாயின் எஜமானோ வளர்த்தவரோ அல்லது ஊரவரோ இந்த அணியில் வரவில்லை.

யாத்திரையில் பல அற்புதங்களை முருகன் நடாத்துவதுண்டு. எனவே நாங்கள் அவருக்கு கழுத்தில் பட்டுக் கட்டி நெற்றியிலே விபூதி சந்தனம் குங்குமம் இட்டு அவரை அழைத்து வந்தோம். வழிநெடுகிலும் அது நாங்கள் உண்ணுகின்ற பிரசாதம் மற்றும் மரக்கறி சாதத்தையே உண்டு வந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக திருகோணமலையில் சற்று நோய்க்கு இலக்காகி இருந்த காரணத்தினால் அங்குள்ள மிருக வைத்தியரிடம் சென்று காட்டிய பொழுது அவர் அதற்கு ஊசி செலுத்தினார் .

அவரை அங்கே விட்டு விட்டு வருவோம் என்று சிந்தித்தோம் . ஆனால் மறுகணம் அது எங்களோடு இணைந்து கொண்டு இன்றும் எங்களுக்கு முன்னால் வழிகாட்டி பயணித்து வருகின்றது” என்றார்.

கதிர்காம பாதயாத்திரையில் “சுப்பிரமணியம்” என்ற நாய், பக்தர்களோடு இணைந்து சைவ உணவை மட்டுமே உட்கொண்டு, இத்தனை தூரம் பயணிப்பது உண்மையிலேயே பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான நிகழ்வுதான்! ஆன்மீக ரீதியாகவும், விலங்குகளின் நடத்தை ரீதியாகவும் இந்து தர்மத்திலும், குறிப்பாக கதிர்காம வழிபாட்டிலும் விலங்குகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. முருகப்பெருமானின் வாகனம் மயில் மற்றும் சேவல் என்றாலும், வேடன் வடிவில் முருகன் காட்சியளிக்கும் போது அவரோடு வேட்டை நாய்களும் உடன் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

​பக்தர்களின் “அரோகரா” முழக்கங்களுக்கு மத்தியில், எந்தவித பயமும் இன்றி, ஒரு வழிகாட்டி போல இந்த நாய் முன்னின்று நடப்பது இறைவனின் சித்தமாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது.

முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றான “சுப்பிரமணியம்” என்ற பெயரையே இந்த நாய்க்கு சூட்டி, அதனை ஒரு சாதாரண விலங்காகப் பார்க்காமல், முருகனின் ஒரு தூதனாகவே பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கருதி அரவணைத்துச் செல்கின்றனர்.

​இயற்கையிலேயே நாய்கள் மாமிச உண்ணிகள் (Carnivores) அல்லது அனைத்துண்ணிகள் (Omnivores) ஆகும். ஆனால், இந்த நாய் 32 நாட்களாக முழுக்க முழுக்க சைவ உணவை (அன்னதான உணவுகள், பிஸ்கட், பால், ரொட்டி) மட்டுமே சாப்பிட்டு வருவதுதான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

பக்தி என்பது மனிதர்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது” என்பதை இந்த “சுப்பிரமணியம்” நாய் உணர்த்துகிறது. காடுகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்து, கதிர்காமக் கந்தனின் சன்னதியை நோக்கிச் செல்லும் இந்த ஜீவனின் பக்தி, பாதயாத்திரை செல்லும் மற்ற பக்தர்களுக்கும் பெரும் ஊக்கத்தையும், ஆன்மீக பலத்தையும் கொடுத்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *