இலங்கை எப்போதும் நடுநிலையான அணுகுமுறையையும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலான செயற்பாடுகளையும் கடைப்பிடித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். பால் கபூருடன் அமைச்சில் நடத்தப்பட்ட சந்திப்பில், கருத்துரைக்கையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அமைச்சர்;
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புகளை மறக்கமுடியாது. இதற்கு நன்றி தெரிவிக்கும் கடமைப்பாடு எங்களுக்குண்டு. மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலையில் இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா ஆதரவளித்தது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு கடல் கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்கி நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளை அமெரிக்கா பலப்படுத்தியது. இலங்கையில் தற்போது பாதுகாப்பானதும் முதலீட்டிற்கு உகந்ததுமான சூழல் உருவாகியுள்ளது.இதனால், அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.இதற்கான அழைப்பையும் விடுக்கிறேன். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தும் என்றார்.




