வடபகுதி தீவுகளுக்கு டீசல் மின்சாரத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமம் மற்றும் செலவினங்களை கருத்திற்கொண்டு மாற்றுத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.இப்பகுதிகளில்,காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் இன்னும் மின்கல சேமிப்புகளூடாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியுமென எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் உதவியுடன் நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நயினாதீவுகளுக்காக அமைக்கப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகள் திட்டத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.இதுபற்றி மேலும் கருத்துரைத்த அமைச்சர்; “டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகம். மேலும், இந்தத் தீவுகளுக்கு டீசலைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் சிரமங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு மின்சார விநியோகம் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. ஆயினும் , இந்த புதிய மின்சார கட்டமைப்பை இணைப்பதன் மூலம், நயினாதீவு, அனலைத்தீவு மற்றும் நெடுந்தீவு மக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை எங்களால் உறுதி செய்ய முடியும்.

சிறு தீவுகளில் கலப்பின புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளை உருவாக்கும் திட்டம் என்பது, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அப்பால் அமைந்துள்ள நயினாதீவு, அனலைத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு நம்பகமான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார விநியோகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது, தனித்துவமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டமாகும். இத்திட்டம் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இதன் மொத்த முதலீடு சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.இந்தத் தீவுகளுக்கு டீசல் எரிபொருள் அடிப்படையிலான உற்பத்தி அமைப்புகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது, அவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் அதிக செலவு மிக்கதாகவும் இருந்தன. மேலும், கடல் வழியாக டீசலைக் கொண்டு செல்வது ஒரு கடினமான பணியாகவுள்ளது. எனவே, சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் மற்றும் மின்கல அமைப்பைப் பயன்படுத்தி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத ஒரு சுயாதீன கலப்பின ஆற்றல் கட்டமைப்பு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.




