கெரம் போர்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி மனு பி. குமாரன் ரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி ரம்ஸி பாச்சாவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தனது கட்சிக்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அவ்வாறிருக்கையில், சட்டமா அதிபரினால் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக மற்றொரு வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, ஒரே குற்றச்சாட்டுக்காக இரண்டு முறை வழக்குத் தொடர்வது சட்டத்திற்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டினார். அது தொடர்பாக மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தனது கட்சிக்காரர் முதற்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், மேல் நீதிமன்ற நீதிபதி அந்த முதற்கட்ட ஆட்சேபனைகளை நிராகரித்து விட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




