ஈரான் போரை நிறுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ‘ஆதரவு’

3 Min Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க முற்படும் நகர்வுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு, பொதுவெளியில் ஏற்பட்ட அரிதான எதிர்ப்பாக 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். 215–208 என்கிற கணக்கில் இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் நான்காவது முயற்சி இது. இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஒருவேளை செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினாலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.

இந்தத் தீர்மானத்தை டிரம்ப் நிராகரிக்கலாம் என்பதோடு டிரம்பின் வீட்டோவை ரத்து செய்ய வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

கடந்த மே மாதம், ஏழு முறை தோல்வியடைந்த பின்னர் இதே போன்றதொரு தீர்மானம் செனட் சபையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக சபை வாக்கெடுப்புக்கு வரவில்லை.

பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தோமஸ் மாஸ்ஸி, ப்ரையன் பிட்ஸ்பேட்ரிக், டொம் பேரட் மற்றும் வொரன் டேவிட்டன் ஒன்றுபட்ட ஜனநாயக கட்சியினருடன் இணைந்து கடந்த புதன்கிழமை தீர்மானத்தை நிறைவேற்றினார். கடந்த முறை இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஜனநாயக கட்சி உறுப்பினரான ஜேரட் கோல்டன் இந்த முறை ஆதரவாக வாக்களித்தார்.

‘பாராளுமன்றத்தால் மட்டுமே போரைப் பிரகடனப்படுத்த முடியும். அது நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று,’ என மிச்சிகனைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினரான பேரட் தெரிவித்தார்.

இந்த வாக்கெடுப்புக்காக டிரம்பிடம் இருந்து எதிர்ப்பு வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘நான் எனது மனசாட்சிப்படி எதைச் சரி என நினைக்கிறேனோ அதற்கு வாக்களித்தேன், அதை ஏற்கவும் நான் தயாராக இருக்கிறேன்.’ என்றார்.

டிரம்பின் குடியரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவின் சமீபத்திய வெளிப்பாட்டை இது குறிக்கிறது. இதற்கு சில தினங்களுக்கு முன் தான் பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியினரிடம் இருந்து வந்த எதிர்ப்பால் டிரம்ப் நிர்வாகம் தனது அரசியல் கூட்டாளிகளுக்கான 1.8 பில்லியன் டொலர் ‘ஆயுதமயமாக்கலுக்கு எதிரான’ நிதியில் இருந்து பின்வாங்கியது.

பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகார குழுவில் உள்ள முன்னணி ஜனநாயக கட்சி உறுப்பினரான க்ரெகோரி மீக்ஸ் இந்த வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இது ஈரானில் ஜனாதிபதி; டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்டவிரோத மற்றும் விலை உயர்ந்த போருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த பின்னடைவு ஆகும். அத்தோடு அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் படி.’ என்றார்.

போரின் குறிப்பிட்ட நோக்கங்களை அடைய டிரம்ப் தோற்றுவிட்டதாகக் கூறும் மீக்ஸ் அதே வேளையில் உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தியதோடு ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு ஒரு ராஜாங்க தீர்வை அடைவதை மேலும் கடினமாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை இணைந்து முன்மொழிந்த மீக்ஸ் மேலும் கூறுகையில், ‘தீர்மானம் நிறைவேறியிருப்பது ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் மேலும் ஒரு முடிவற்ற போரை விரும்பாத தங்களது மக்களின் குரல்களுக்கு அதிக அளவிலான குடியரசுக் கட்சிக்காரர்கள் செவிமடுக்கின்றனர்.’ என்றும் குறிப்பிட்டார். போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கின்ற போதிலும் அண்மைய நாட்களில் ஈரானை அமெரிக்கா தாக்கியுள்ளது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க கூட்டாளியான குவைட் மீது ஈரான் பதில் தாக்குதல்கள் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *