யாழ்.பல்கலையில் வெசாக் கூடு உடைப்பு; பொலிஸார் தீவிர விசாரணை

1 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்று முன்தினம் (31) இரவு இனந்தெரியாதோாரால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் தடயங்களைச் சேகரித்துள்ளதுடன், வெசாக் கூடுகளைச் சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிவதற்காகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை பல்கலைக்கழக நிர்வாகமும் , சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அதேவேளை தமிழ் – சிங்கள மாணவர்கள் இடையில் இன முரண்பாட்டினை ஏற்படுத்தவே இவ்வாறான நாசகரமான செயல் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *