வீடொன்றில் ரூ. 1.15 கோடி திருடிய 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

1 Min Read

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ரூ. 1 கோடியே 15 இலட்சம் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 27ம் திகதி பகல் வேளையில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் குறித்த சந்தேகநபர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

சந்தேநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த சந்தேநபர்கள் வீட்டினுள் இறங்கி பணத்தை பார்த்துவிட்டு அதில் அதிக பணம் இருப்பதை நெடுங்கேணியில் உள்ளவரிடம் காணொளி அழைப்பு மூலம் தெரிவித்துள்ளனர். அவர் முழுப்பணத்தையும் எடுத்துவரும்படி கூறியுள்ளார்.

அவர்கள் அந்தப் பணத்தை நெடுங்கேணி எடுத்துச் சென்று அங்கு காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு இருவரும் யாழ்ப்பாணம் வந்தபோதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அதனையடுத்து நெடுங்கேணிக்கு விரைந்த பொலிஸார் காணிக்குள் புதைத்து வைத்திருந்த ரூ. 74 இலட்சம் பணத்தை மீட்டுள்ளனர்.

அதேவேளை மிகுதி பணத்தினை நெடுங்கேணியை சேர்ந்தவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்று அனுமதி பெற்று சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *