சீனாவின் பொம்மை உற்பத்தித் துறை (Toy Industry) தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருவதாக PML Daily ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்டர்கள் சரிவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்கை தோல்விகள் காரணமாக இத்துறையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 20 அன்று, குவாங்ஷி (Guangxi) மாகாணத்தின் யுலின் (Yulin) நகரில் இயங்கி வந்த ‘வாஷிங் டாய்ஸ் குரூப்’ (Washing Toys Group) என்ற ஹாங்காங் நிதி உதவியுடன் இயங்கிய முன்னணி நிறுவனத்தின் 4 பெரிய தொழிற்சாலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன.
இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள், உடனடியாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சம்பள பாக்கியைக் கோரி தொழிலாளர்கள் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
முன்னதாக 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து Kenwa Toys, Shenley Toys, Double Toys மற்றும் Everwind Toys போன்ற மாபெரும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதில் Everwind நிறுவனம் மட்டுமே ஒரு காலத்தில் 300,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் பொம்மைகளுக்கான ஆர்டர்கள் சுமார் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக வரி (Tariff) பதற்றங்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக செங்கடல் (Red Sea) மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால் ஷாங்காயில் இருந்து மத்திய கிழக்கிற்கான கொள்கலன் (Container) கட்டணங்கள் 3,000 – 4,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்கள் வரை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளன.
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், பொம்மை தயாரிப்புக்கு தேவையான பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்துள்ளதாகக் காட்டினாலும், கள யதார்த்தத்தில் தனியார் தொழிற்சாலைகள் கடுமையான பண நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
சீனாவில் தனியார் நிலையான சொத்து முதலீடுகள் (Private fixed asset investment) ஆண்டுக்கு ஆண்டு 6.2% வீழ்ச்சியடைந்துள்ளன. உள்நாட்டு பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை சரிந்து வருவதால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளுக்கு மூலதனத்தை மாற்றி வருவதுடன், புலம்பெயர்ந்தும் வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகின்றன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எண்களைக் காண்பிப்பதில் மட்டுமே அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலோ அல்லது தனியார் துறையை ஊக்குவிப்பதிலோ சீன கம்யூனிஸ்ட் கட்சி தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்களுக்கான ஊதியம் உத்தியோகபூர்வ குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைக்கப்பட்டு, ஒரு மணித்தியாலத்திற்கு 13 – 22 யுவான் (1.90 – 3.22 டொலர்) என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிலாளர் ஒப்பந்தச் சட்டங்கள் மீறப்பட்டு, இழப்பீடுகள் மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் சீனாவின் இந்த குறைந்த செலவு உற்பத்தி மாதிரி (Low-cost export model) தற்போதைய உலகளாவிய சூழலில் நீடிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும், பொம்மைத் துறையின் இந்த வீழ்ச்சி சீனாவின் ஏனைய முக்கிய உற்பத்தித் துறைகளுக்கான ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.



