தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1979 இல் அமெரிக்கா, தாய்வானில் இருந்து சீனாவுக்கு இராஜதந்திர அங்கீகாரத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் தாய்வான் ஜனாதிபதிகள் நேரடியாகப் பேசிக்கொண்டதில்லை.
இவ்வாறான நிலையில் அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, தாய்வான் ஜனாதிபதியை பேச அழைப்பீர்களா என்று மேரிலாந்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ’நான் அவரிடம் பேசுவேன்’ என்று நேற்று முன்தினம் கூறினார்.
‘நான் அனைவரிடமும் பேசுகிறேன். அந்தச் சூழ்நிலையை நாங்கள் நன்றாகக் கையாண்டு வருகிறோம்’ என்றும் எயார் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணத்தைத் தொடங்க முன் அவர் கூறினார்.
தாய்வான் பிரச்சினையிலும் நாங்கள் பணியாற்றுவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள சில தினங்களுக்குள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
சீனாவுக்கான விஜயத்தின் போது, ’தாய்வான் தவறாகக் கையாளப்பட்டால் அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறலாம்’ என்று சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் ட்ரம்பிடம் நேரடியாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



