இஸ்ரேல் மன்னிப்பு கோர வேண்டும் – இத்தாலி வலியுறுத்து

1 Min Read

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆர்வலர்களை ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்தியதற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோர வேண்டும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வலியுறுத்தியுள்ளார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் தரையில் மண்டியிட்டிருந்த ஆர்வலர்களை, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் கேலி செய்யும் காணொளி வெளியானதை அடுத்து, ரோமில் உள்ள இஸ்ரேலியத் தூதரை அழைத்து இத்தாலிய அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.

இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்தில் உள்ள ஒரு தற்காலிகத் தடுப்புக்காவல் பகுதியிலும், ஒரு கப்பலின் தளத்திலும் 40இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 430 போராட்டக்காரர்கள் படமாக்கப்பட்டனர்.

அச்சமயம் அமைச்சர் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியை அசைத்து, கைதிகளிடம் கேலியாக, ‘இஸ்ரேலுக்கு வரவேற்கிறோம், நாங்கள் தான் இந்த வீட்டின் எஜமானர்கள்’ என்று கூறினார்.

அத்தோடு அங்கு அமைச்சர் பென்-க்விர் கடந்து சென்றபோது, ​​பலஸ்தீனத்தை விடுவி என்று ஒரு பெண் ஆர்வலர் குரல் எழுப்பியதால், பாதுகாப்புப் படையினர் அவரைத் தரையில் தள்ளிய காணொளியும் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது.

இரண்டாவது காணொளியில், பென்-க்விர், இவர்கள் பெரிய வீரர்களைப் போன்று மிகுந்த பெருமையுடன் குளோபல் சுமுத் கப்பல் குழுவில் இஸ்ரேலை நோக்கி வந்தனர். இப்போது அவர்களைப் பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *