குஜராத் டைட்டன்;ஸ் அணியை 29 ஓட்டங்களால் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.
கொல்கத்தா, ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொல்கத்தா அணிக்கு பின் அலன் 35 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 93 ஓட்டங்களை விளாசினார். அகர்கிரிஷ் ரகுவன்சி (82) மற்றும் கெமரூன் கிரீன் (52) ஆகியோரும் அரைச்சதம் விளாசினார்.
இதன்மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கும் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து பதிலெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் கடைசிவரை போராடினாலும் அந்த அணியால் 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களையே பெற முடிந்தது. அணித் தலைவர் சுப்மன் கில் 85 ஓட்டங்களை விளாசியதோடு ஆரம்ப வீரர் சாய் சுதர்ஷன் 53 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியுடன் கொல்கத்தா அணி 11 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும் குஜராத் 2 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



