ஹோர்முஸில் கப்பல் போக்குவரத்திற்கு கட்டணம் வசூலிக்க ஈரான் புதிய திட்டம்

4 Min Read

உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை நிர்வகிக்க புதிய திட்டத்தை விரைவில் அறிவிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அந்த கடற்பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் ‘சேவை கட்டணம்’ ஒன்று அறவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமைதி உடன்படிக்கை ஒன்று விரைவில் எட்டப்படாவிட்டால் அது ஈரானுக்கு ‘மிக மோசமான காலமாக’ அமையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை எச்சரித்த நிலையிலேயே இந்தத் திட்டத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எதிரிகளின் இராணுவ உபகரணங்கள் கடந்து செல்வதை ஈரான் இனியும் அனுமதிக்காது என்று அந்நாட்டு முதலாவது துணை ஜனாதிபதி முஹமது ரேசா ஆரிப் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

‘ஹோர்முஸ் நீரிணை மீதான எமது இறைமையை நாம் விட்டுக்கொடுத்திருந்தோம். நாம் முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக இராணுவ உபகரணங்கள் செல்வதற்கு அனுமதித்தோம் அவை எமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. அதனை நாம் மீண்டும் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஆரிப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை பேசிய ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு தலைவர் இப்ராஹிம் அசிசி, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தொழில்முறை பொறிமுறை ஒன்றை ஈரான் தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அந்தத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசிசி எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ஈரானிய தேசிய இறைமையை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச வர்த்தகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பொறிமுறை மேம்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் பயனை, வணிகக் கப்பல்கள் மற்றும் ஈரானுடன் ஒத்துழைக்கும் தரப்புகள் மட்டுமே பெற அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

‘இந்த பொறிமுறையின் கீழ் சிறப்பு சேவை வழங்குவதற்காக கட்டணம் அறவிடப்படும்’ என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 20 வீதமான ஏற்றுமதிகள் இந்த நீரிணை ஊடாகவே இடம்பெற்று வருகின்றன. எனினும் கடந்த பெப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் ஈரான் இந்த நீரிணையை முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 7 தொடக்கம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரானின் முன்மொழிவுகளை இரு தரப்பும் பரஸ்பரம் நிராகரித்துள்ளன.

இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியாக மத்தியஸ்த நாடாக செயற்படும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த சனிக்கிழமை ஈரான் பயணமானார். பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் டெஹ்ரானுக்கு சென்ற சில நாட்களுக்குப் பின்னரே அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படுமா என்பது குறித்து தமக்கு உறுதி இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

‘எனக்கு தெரியவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், மிகவும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும். அவர்களுக்கே ஓர் உடன்பாட்டை எட்டுவதில் நலன் உள்ளது,’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு அமெரிக்கா அறிவித்து சில மணி நேரத்திலேயே இஸ்ரேல், தெற்கு லெபனானில் தனது உக்கிர தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுடன் அமெரிக்கா இரண்டு நாட்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே போர் நிறுத்தத்தை நீடிக்கும் அறிவிப்பு வெளியானது. ஆனால் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர், அவரது மகள் மற்றும் துணை மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானின் ஹபௌஷ் சிறு நகரில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான் தாக்குதலில் கணவர், மனைவி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் இஸ்ரேலிய படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆளில்ல விமானத் தாக்குதல் ஒன்றில் இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவிலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதோடு கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 871 ஆக அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *