நாட்டின் அமைதிக்காக பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் நாள்!

2 Min Read

இலங்கையின் 17ஆவது தேசிய ரணவிரு தினம் (தேசிய படை வீரர்கள் நினைவு தினம்) நாளை 2026 மே 19 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.45 மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய ரணவிரு நினைவுத் தூபியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முப்படைகளின் தளபதியாக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளும், கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தவுள்ளனர். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த போர் வீரர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 மே 18 அன்று அப்போதைய அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதற்காக 28,708 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர்நீத்துள்ளனர், மேலும் 40,107 பேர் நிரந்தர ஊனமுற்றுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, போரில் உயிர்நீத்த தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் வீரர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 19 அன்று ‘தேசிய வீரர்கள் நினைவு தினம்’ அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் இந்த தினத்தை முன்னிட்டு பிரமாண்டமான முப்படைகளின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும், 2016ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கூட்டுப் படை அணிவகுப்பு வழக்கத்தை நிறுத்தினார். அன்றிலிருந்து, இது ஒரு கலாசார மற்றும் மத வழிபாட்டு நினைவேந்தல் நிகழ்வாக, நினைவுத் தூபிகளுக்கு அருகில் மாத்திரம் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் ஜனாதிபதியாக அவர் இந்த படை வீரர்கள் தினத்தில் கலந்துகொள்வது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. இத்தினம் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் அமைதிக்காக பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் நாளாக இலங்கையில் பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *