உலகளாவிய ‘Canvas’ கல்வித் தளம் மீது பாரிய சைபர் தாக்குதல்

1 Min Read

– கப்பம் வழங்காவிட்டால் தகவல்கள் லீக்: ஹெக்கர் குழு எச்சரிக்கை

ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படும் ‘Canvas’ எனும் இணைய அடிப்படையிலான கல்வித் தளம் மீது நடத்தப்பட்ட சர்வதேச சைபர் தாக்குதலினால் (Cyberattack), உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

பல்வேறு நாடுகளிலும் இறுதிப் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் கல்விச் செயற்பாடுகளில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘ShinyHunters’ எனப்படும் சர்வதேச சைபர் குற்றக் கும்பல் இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதுடன், சுமார் 3.5 டெராபைட் (Terabytes) அளவுள்ள தரவுகளைத் திருடியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட தரவுகளில் மாணவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், மாணவர் அடையாள இலக்கங்கள் மற்றும் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மே 12 ஆம் திகதிக்குள் கோரப்பட்ட கப்பப் பணம் (Ransom) வழங்கப்படாவிட்டால், இந்தத் தரவுகளை இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப்போவதாக அக்குழு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தச் சைபர் தாக்குதலினால் அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள சுமார் 9,000 கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஹார்வர்ட் (Harvard), கேம்பிரிட்ஜ் (Cambridge), கொலம்பியா மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் தமது தளங்களுக்கான அணுகலைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், தேர்வுத் திகதிகளை மாற்றியமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

தற்போது ‘Canvas’ மென்பொருளை உருவாக்கிய ‘Instructure’ நிறுவனம், பெரும்பாலான பயனர்களுக்குச் சேவைகள் பகுதியளவில் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது
. இருப்பினும், தரவுப் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடையும் வரை மாணவர்களுக்கு முழுமையான அணுகல் வழங்கப்பட மாட்டாது எனச் சிட்னி பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

2019 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த ‘ShinyHunters’ ஹக்கர் குழு, முன்னதாக ‘Rockstar Games’ போன்ற பெரும் நிறுவனங்களையும் இலக்கு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *