மொராக்கோவில் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என்று அமெரிக்காவின் ஆபிரிக்கா கட்டளைப் பிரிவு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
வருடா வருடம் நடைபெறும் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த இரு படையினரும் மொராக்கோவின் தென்மேற்கு நகரமான டான் டான் அருகே காணாமல் போயுள்ளனர் என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க சிங்கம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப்பயிற்சியில் பங்கேற்ற இவ்வீரர்களை தேடும் நடவடிக்கையைப் பயிற்சியில் பங்கேற்ற அமெரிக்கா, மொராக்கோ மற்றும் பிற நாடுகள் தொடங்கியுள்ளன.
இத்தகைய போர்ப் பயிற்சிகள் ஏப்ரல் மாதம் முதல் டீயூனிசியா, கானா மற்றும் செனகல் உட்பட நான்கு நாடுகளில் நடைபெறுகின்றன. இந்த இரு படை வீரர்களும் ஒரு செங்குத்தான பாறைக்கு அருகில் காணாமல் போயுள்ளதாக மொராக்கோ இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, அந்த இரண்டு வீரர்களும் கடலில் விழுந்திருக்கலாம், என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர், இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



