மலையகப் பெண்கள் எத்தகைய பிரச்சினைகள் எதிர்கொண்டாலும் எவரிடமும் கையேந்தாத ஒரு தன்னிறைவு நிலையை அடைய வேண்டும் என ‘ஸ்ரீ சிகரம்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார்.
மலையகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீ சிகரம் பௌண்டேசன், நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா உள்ளிட்ட தோட்டப்புறப் பகுதிகளில் இலவச தையல் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பயிற்சியின் மூலம் பயனடைந்து சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, தையல் பயிற்சி பெற்ற மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடை மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியும், புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வும் மஸ்கெலியா, புலூம்பீலட், நோர்வூட் மற்றும் புளியாவத்தை ஆகிய இடங்களில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அகிலா கைலைநாதன், பெண்கள் எவரிடமும் கையேந்தாமல் இருப்பதற்கு தையல் கலை ஒரு சிறந்த கருவியாகும். நான் வீழ்ந்த நேரங்களிலெல்லாம் எனக்குத் துணிச்சலையும் தைரியத்தையும் கொடுத்தது இந்தத் தையல் கலை தான். அதனாலேயே மலையகத்தில் கஷ்டப்படும் பெண்களும் இக்கலையைக் கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருகிறேன்” என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய இணைப்பாளர் கருணாநிதி, “வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரான்சில் வசித்தாலும், மலையக மண்ணில் பிறந்தவர்கள் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் அகிலா கைலைநாதன் பல்வேறு சமூகத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இத்தகைய நல்லவர்களைப் போற்றும் ஒரு சமூகம் உருவாக வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இக்கண்காட்சியில் மாணவர்களின் ஆடை அலங்காரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் விடுமுறை தினங்களில் நடத்தப்படும் மொழிப்பயிற்சி வகுப்புகளையும் அகிலா கைலைநாதன் பார்வையிட்டு மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பணிப்பாளர் தமயந்தி, வளவாளர் அழகுரு, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் இளையராஜா மற்றும் தையல் பயிற்சி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மலையகப் பெண்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இத்தகைய முயற்சிகள் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



