இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து ஏ அணி நிதானமாக ஆடி 4 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நியூசிலாந்து ஏ அணிக்கு மத்திய வரிசையில் மத்தியூ பொயில் சதம் பெற்றார். 116 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 102 ஓட்டங்களைப் குவித்தார். இதன்போது அவர் ஆரம்ப வீரர் கேர்டி ஹீபியுடன் இணைந்து 3 ஆவது விக்கெட்டுக்கு 114 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஹீபி நிதானமாக ஆடி 130 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து ஏ அணி 63 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. மெக்ஸ் சூ 26 ஓட்டங்களுடனும் மிட்சல் ஹே 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை ஏ அணி சார்பில் திலும் சதீர 23 ஓவர்களில் 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துலாஜ் சமுதித்த மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றுவதற்கு இந்தப் போட்டி தீர்க்கமானதாகும்.



