உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியை கட்டியெழுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட்டின் அடையாளத்தை புரிந்துகொள்வது முக்கியமானதாக உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கெரி கேர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 58 வயது கேர்ஸ்ட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தக் காலத்தை கடந்த வாரம் ஆரம்பித்தார். அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அவர் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.
‘அணியின் கலாசாரத்தை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், வீரர்களை ஊக்குவிப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் செயல்படும் சூழலையும் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நேற்று (23) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேர்ஸ்டன் தெரிவித்தார்.
‘இந்த பயணத்தின் போது நான் இன்னும் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
கேர்ஸ்டன் 2008 தொடக்கம் 2011 வரை இந்திய பயிற்சியாளராக செயற்பட்டதோடு அவரது பயிற்சியில் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றது. பின்னர் அவர் 2011 தொடக்கம் 2013 வரை தென்னாபிரிக்க அணி பயிற்சியாளராக செயற்பட்டார். இலங்கை தலைமை பயிற்சியளராக இருந்த சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் ஜூனில் முடிவுக்கு வரும் நிலையிலேயே அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபிய நாடுகள் இணைந்து நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.



