லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 160 ஓட்ட வெற்றி இலக்கை காத்து 40 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு தொடர்ந்து நான்காவது தோல்வியை சந்தித்து லக்னோ அணி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
லக்னோவில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்சி ஆரம்பத்திலேயே 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த லக்னோ அணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த அணி 18 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.



