அதாவுல்லாஹ்வின் புதல்வருக்கு செப். 01 வரை விளக்கமறியல் – பெண் ஓருவரை ஆசை காட்டி மோசம் செய்ததாக குற்றச்சாட்டு!

Admin
By
Admin
1 Min Read
அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் பேஸ்புக் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்தார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் அப்பெண் முறைப்பாடு செய்திருந்தார்.முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காகப் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போது பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் நேற்று முன்தினம் (18) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் செப்டெம்பர் 01 வரை நீடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *