இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (18) நடந்த நியூ யங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த புளூ ஸ்டார் அணி 5–0 என வெற்றியீட்டியது. கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் புளூ ஸ்டார் 2–0 என முன்னிலை பெற்றது. நவோத் விஹாங்க அபேசிறி 21 ஆவது நிமிடத்திலும், அவுது பிராங்கி 35 ஆவது நிமிடத்திலும் கோல் பெற்றனர்.
இரண்டாவது பாதியிலும் புளூ ஸ்டாரின் ஆதிக்கம் நீடித்தது. குறிப்பாக பிராங்கி 76 மற்றும் மேலதிக நேரத்தில் மேலும் இரு கோல்களைப் பெற்று தனது ஹட்ரிக் கோலை பூர்த்தி செய்தார். அதேபோன்று 54 ஆவது நிமிடத்தில் மொஹமட் ஷிபான் மேலும் ஒரு கோலை பெற்றார்.
இந்த வெற்றியுடன் புளூ ஸ்டார் அணி தனது புள்ளிகளை 7 ஆக அதிகரித்து புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. இந்தப் போட்டியுடன் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் முடிவுக்கு வந்தன. இதன்படி அப் கன்ட்ரி லயன்ஸ் அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் வெற்றியீட்டி முதலிடத்தில் உள்ளது.




