தெற்கு பிலிப்பைன்ஸில் துப்பாக்கி பிரயோகம்: இரு மாணவர் பலி

1 Min Read

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளவர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ஜம்போங்கா நகரில் தனியாருக்குச் சொந்தமான அடெனியோ டி ஜம்போங்கா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பாடசாலையில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, துப்பாக்கி ஏந்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியையும் ரைபிள் ரக துப்பாக்கியொன்றையும் பாடசாலை வளாகத்திற்குள் கொண்டு வந்து வகுப்பறைக்குள் இருந்த மாணவர்களை நோக்கி பிரயோகம் செய்துள்ளார். என்றாலும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினர் விரைந்து செயற்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தவும் பாடசாலைகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ள சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில், நமது பிள்ளைகள் கற்கவும், வளரவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணவும் நாம் ஒப்படைக்கும் இடம் நமது பாடசாலைகள்தான். அவை நமது நாட்டின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *