இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தேசத்தின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில், அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2026 இல் காப்புறுதித் துறையில் தங்க விருதை சுவீகரித்திருந்தது.
மேலும், வினைத்திறன் முகாமைத்துவ சிறப்பில் தங்க விருதை நிறுவனம் சுவீகரித்திருந்ததுடன், சகல தொழிற்துறைகளிலும் இந்தப் பிரிவில் ஒட்டு மொத்த வெற்றியாளராகவும் தெரிவாகியிருந்தது. இணைந்த இந்த பெருமைக்குரிய கௌரவிப்புகளினூடாக, காப்புறுதித் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைத்துவம் மேலும் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முன்னணி வியாபாரங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தேசிய வியாபார சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு, நாட்டின் பெருமைக்குரிய கூட்டாண்மை கௌரவிப்பு கட்டமைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. தலைமைத்துவம், மூலோபாயம், ஆளுகை, வினைத்திறன் முகாமைத்துவம், செயற்பாட்டு வினைத்திறன், மக்கள் விருத்தி மற்றும் பங்காளர் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் நிறுவனங்கள் கொண்டுள்ள சிறப்புகளை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளதுடன், நிலைபேறான நிறுவனசார் சிறப்பு தொடர்பில் பரந்த மதிப்பாய்வை வழங்குவதாக அமைந்துள்ளது.




