உக்ரைன் போருக்கு எதிராகக் குரல் எழுப்பிய எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.தாராளவாத யாப்லோகோ கட்சியின் மூத்த உறுப்பினரான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை யாப்லோகோ கட்சி மட்டுமே போரை வெளிப்படையாக எதிர்த்துவரும் கட்சியாக உள்ளது.
ரஷ்ய இராணுவத்தை அவமதிப்பு செய்ததாகவும், போலிச் செய்திகளைப் பரப்பியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. எஸ்டோனிய எல்லையிலிருந்து 12 மைல் கிழக்கே உள்ள பிஸ்கோவ் நகரில் உள்ள நீதிமன்றமே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைக்கு எதிரான தனது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் தனது இறுதி உரையில் ஷ்லோஸ்பெர்க் கூறுகையில், ‘நான் ஒரு நிரபராதி. என் மீது சட்டவிரோதமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் இருந்தபோது சட்டவிரோதமாக என் சுதந்திரம் பறிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தும் சட்டவிரோதமாக என் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.




