ஈரான் – அமெரிக்காவின் இடைக்கால உடன்பாட்டை மீட்பதில் இழுபறி நீடிப்பு

3 Min Read

வளைகுடாவில் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் இறுதிக் கட்ட உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அமெரிக்கா மற்றம் ஈரான் இடையே கடுமையான இழுபறி நீடிப்பதோடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், ஈரான் தலைவர்கள் மீது மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்ட நிலையிலேயே இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதனால் இந்தப் பதற்றத்திற்கு தீர்வொன்றை எட்டும் நம்பிக்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில், ‘அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவது’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் விரைவிலேயே முறிவடைந்தது. ஜூலை 7ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப், ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என்று தெரிவித்தார். அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஈரான் வெளியுறவு அமைச்சு அந்த ஒப்பந்தம் ‘இடைநிறுத்தப்பட்டுள்ளது’ என்று அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக அளித்த உறுதிமொழியை ஈரான் நிறைவேற்றத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான், அமெரிக்காவே தனது உறுதிமொழிகளை மீறிவிட்டதாக கூறுகிறது. குறிப்பாக, ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவற்றை அமெரிக்கா நிறைவேற்றவில்லை என்று ஈரான்; குற்றம்சாட்டுகிறது.

‘மத்தியஸ்தர்களின் மூலம் விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில், அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்திற்குத் திரும்புவதும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விடயத்தில் முற்றிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை,’ என்று ஈரானிய தரப்பைச் சேர்ந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா ‘முழுமையான கட்டுப்பாட்டை’ கொண்டுள்ளது என்று டிரம்ப் கடந்த புதனன்று தெரிவித்தார்.

ஆனால், இந்த நீர்வழியை நிர்வகிப்பதற்காக ஈரான் அமைத்துள்ள பாரசீக வளைகுடா நீரிணை ஆணைக்குழு, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது என்றும், ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அது மீண்டும் திறக்கப்படாது என்றும் தெரிவித்தது.

‘ஈரான் பேசுவதிலேயே இருக்கிறது செயல்பாட்டில் எதுவும் இல்லை. மத்திய கிழக்கின் கொடுமைக்காரனாக இருந்த ஈரான் இனி இல்லை,’ என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் தெரிவித்தார்.

மோதல் ஆரம்பித்ததில் இருந்து, டிரம்ப் ஒருபுறம் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் எச்சரிக்கைகளை விடுத்தும், மறுபுறம் அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்று கூறியும் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

போருக்கு முன்னர், ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ள குறுகிய கடல்வழியும், பாரசீக வளைகுடாவுக்கான நுழைவாயிலுமான ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாண்டது.

கடந்த பெப்ரவரியில் போர் ஆரம்பித்ததில் இருந்து, சர்வதேச அளவிலான முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் ரக மசகு எண்ணெய் எதிர்கால விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஒரு கட்டத்தில் அவை பீப்பாய் ஒன்றுக்கு 126 டொலர் என்ற உச்சத்தை எட்டின. இது போருக்கு முந்தைய விலையை விட சுமார் 75 வீதம் அதிகமாகும். வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த கவலைகளும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான மாறுபட்ட தகவல்களும் சந்தையில் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *