ஜப்பான் உரிமை கோரும் தீவுக்கு முதல்முறை பயணமானார் புடின்

1 Min Read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜப்பானால் உரிமை கோரப்படும் குரில் தீவுத் தொடரின் இறுதிப் பகுதியில், ஹொக்கைடோ தீவுக்கு அருகே அமைந்துள்ள இட்டுரூப் தீவுக்கு நேற்று (13) விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம், கடந்த புதன்கிழமை ரஷ்யா நடத்திய பாரிய அளவிலான கடற்படைப் பயிற்சிகளுக்கும், ரஷ்யாவின் கூட்டாளியான வட கொரியா ஏவுகணை ஏவியதற்கும் அடுத்த நாளில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா மற்றும் ஜப்பான் இதுவரை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உத்தியோகபூர்வ அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. இதற்கு முக்கிய தடையாக, இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்படாமல் உள்ள தீவுகளின் பிராந்திய உரிமைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தத் தீவுகளை ஜப்பான் ‘வடக்குப் பிரதேசங்கள்’ என்று அழைக்கிறது.

இந்நிலையில் குரில் தீவுத் தொடருக்கு புடின் நேரில் சென்றது இதுவே முதல் முறையாகும். ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் கடற்படைப் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட பின்னரே இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.

புடினின் இந்தப் பயணத்துக்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி, எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘எட்டோரோஃபு உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்கள் வரலாற்று ரீதியாகவும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் ஜப்பானுக்குச் சொந்தமான பிரதேசங்களாகும். இந்தப் பயணத்தை ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது’ என்று மோட்டேகி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *