நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் 85 சதவீதத்திற்கும் அதிகமான நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
4,375 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்வீட்டுத் திட்டத்தில் உள்ளடங்கும் வீடுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களிடம் கையளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடுவலை – மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டுத் திட்டம் 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கொண்டுள்ளது.இதில்,920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் உள்ளடங்கலாக மொத்தம் 256 வீடுகள் காணப்படுவதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.பின்னர்,சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டதையடுத்து 2025 ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.இந்த வீட்டு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.




