இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் 472 ஓட்ட இமாலய வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை இளையோர் அணி முன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றம் கண்டுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய இளையோர் அணி இரண்டாவது இன்னிங்ஸுக்காக 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதன்மூலம் இலங்கை இளையோர்களுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.
இந்நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் 38 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. இந்நிலையில் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சனுஜ விகுனகொட (64) மற்றும் அணித் தலைவர் விமத் தின்சர (ஆட்டமிழக்காது 55) 98 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
எனினும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் கடைசி நாளான இன்றி இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 317 ஓட்டங்களைப் பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.




