அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (21) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன் போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமையால் குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாசவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2024 நவம்பர் 25 ஆம் திகதிய 2412/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பு, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நெரிசலைக் குறைத்தல் ஆகிய பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பான பிரச்சினைகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.




