உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா கடுந்தாக்குதல்

1 Min Read

உக்ரைனின் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதோடு 16 பேர் காயமடைந்தனர் என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேற்று தெரிவித்தார்.

பல்வேறு வகைகளைச் சேர்ந்த 41 ஏவுகணைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களினால் நகரம் முழுவதும் தொடர்ச்சியான சக்திவாய்ந்த வெடிப்புகள் சத்தங்கள் கேட்டன.

அத்தோடு இத்தாக்குதல்களால் பல மாவட்டங்களில் உள்ள கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள், களஞ்சியசாலைகள், பல்பொருள் அங்காடி மற்றும் தங்கும் விடுதி ஆகியவை சேதமடைந்த கட்டமைப்புகளில் அடங்கும் என்று கீயூவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறினார்

காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கீயூவ் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில், அவசரகாலப் பணியாளர்கள் புகைந்துகொண்டிருந்த இடிபாடுகளை அகற்றி, குண்டுவீச்சால் சேதமடைந்த குடியிருப்புகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைத்தனர்.

இதேவேளை ரஷ்யாவை ஒட்டியுள்ள வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தின் தலைநகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ், த கார்டியன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *