பாகிஸ்தானில் சிறுபான்மையின சிறுமிகள் கட்டாய மதமாற்றம்

2 Min Read

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையின சிறுமிகள் கடத்தப்படுவது, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது மற்றும் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவது ஆகிய விவகாரங்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

2025 ஜூலையில் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தியவருக்கே திருமணம் செய்து வைக்கப்பட்ட 13 வயது கிறிஸ்தவ சிறுமியான மரியா ஷாபாஸின் வழக்கை முதன்மையாகக் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

சிறுமி மரியா ஷாபாஸின் வழக்கை விசாரித்த பாகிஸ்தான் அரசியலமைப்பு நீதிமன்றம், சிறுமியின் வயதைச் சரியாக உறுதிப்படுத்தாமல், போலித் திருமண ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கடத்தியவரிடமே சிறுமியை ஒப்படைத்ததற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, பாகிஸ்தானில் திருமணங்கள் மூலம் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளில் 75 சதவீதமானோர் இந்துக்கள் என்றும், 25 சதவீதமானோர் கிறிஸ்தவர்கள் என்றும் இத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுமியை உடனடியாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.சிறுவர் திருமணங்களை தடுப்பதற்கான தேசிய சட்டக் கட்டமைப்பை பாகிஸ்தான் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.பாதிக்கப்பட்ட சிறுபான்மையின குடும்பங்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கான முறையான தேசிய பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் மீது நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். என ஜரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

பாகிஸ்தான் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ எனும் சிறப்பு வர்த்தகச் சலுகையைப் பெற்று வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் ஏற்றுமதியில் 66% வரையான பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி விலக்கு கிடைக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானின் ஆடை மற்றும் ஜவுளித் தொழில்துறைக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாகும் (2025 இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பாகிஸ்தானின் ஏற்றுமதி 9.82 பில்லியன் டொலர்களாக இருந்தது).

இந்த GSP+ சலுகைக் காலம் 2026 டிசம்பர் 31 உடன் முடிவடையவுள்ளது. 2027 இல் புதிய சலுகைகளுக்காக பாகிஸ்தான் விண்ணப்பிக்கவுள்ள நிலையில், மனித உரிமைகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் மத நிந்தனைச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது போன்ற விவகாரங்களில் பாகிஸ்தான் உரிய முன்னேற்றத்தைக் காட்டாவிட்டால், இந்த முக்கிய வர்த்தகச் சலுகை ரத்து செய்யப்படலாம் என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *