பிரான்ஸுக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி, இம்முறையும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டம் வெற்றி அளிக்கவில்லை என்பதோடு பின்களத்தில் செய்த தவறுகள் அந்த அணி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவை தகர்த்தது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இலங்கை நேரப்படி நேற்று (15) அதிகாலையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே பந்தை அதிக நேரம் தக்கவைத்துக் கொண்ட ஸ்பெயின், பிரான்ஸின் தாக்குதல் வரிசைக்கு எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை.
இந்நிலையில் பிரான்ஸ் இடது பக்க தற்காப்பு வீரர் லூகாஸ் டின்யே, ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லமின் யமாலை பெனால்டி பகுதியில் தவறுதலாகத் தடுத்ததற்காக 20 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை மைக்கேல் ஒயர்சபால் கோலாக மாற்றி ஸ்பெயினை 1–0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
முதல் பாதியில் தொடர்ந்து தவறுகள் செய்த பிரான்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. 30 ஆவது நிமிடத்தில் முதுகு காயம் காரணமாக பிரான்ஸின் மத்திய பின்கள வீரர் வில்லியம் சாலிபா களத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின்னர் பிரான்ஸ் சற்று முன்னேற்றம் கண்டாலும், அந்த வேகத்தை ஸ்பெயின் விரைவில் முறியடித்தது.
வலது பக்க தற்காப்பு வீரர் பெட்ரோ போரோ, மத்தியநிலை வீரர் டானி ஒல்மோவுடன் நேர்த்தியான பரிமாற்றத்தை மேற்கொண்டு, கோல் காப்பளர் மைக் மேன்யானை எளிதாக ஏமாற்றி இரண்டாவது கோலை வலைக்குள் செலுத்தினார்.
போட்டி முழுவதும் உத்தி ரீதியான திறனையும், பந்துக் கட்டுப்பாட்டையும் ஆயுதமாக பயன்படுத்திய ஸ்பெயின், பிரான்ஸின் வேகமான எதிர்தாக்குதலை முற்றிலும் முடக்கியது. குறிப்பாக ஸ்பெயினின் இடைவிடாத அழுத்தமான தடுப்பாட்டம் காரணமாக பிராட்லி பார்கோலா, ஒஸ்மான் டெம்பேலே மற்றும் கிலியன் எம்பாப்பே ஆகியோரின் வேகத்தை பயன்படுத்தி எதிர்தாக்குதல் நடத்தும் வாய்ப்பையும் பிரான்ஸ் இழந்தது.
2010 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள ஸ்பெயின், நியூ ஜெர்சியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது ஆர்ஜன்டீன அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது.




