இடைக்கால தொழில்நுட்பக்குழு காசா செல்ல அனுமதிக்கவும்

1 Min Read

இடைக்கால பலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவை காசா பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கும்படி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்தியஸ்தர்கள் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளிடம் இக்கோரிக்கையை முன்வைப்பதாக ஹமாஸ் பேச்சாளர் ஹாசெம் கஸ்ஸெம் தெரிவித்துள்ளார்.

காசாவை சுமார் இரண்டு தசாப்தங்கள் நிர்வாகித்த ஆளும் குழுவை கலைப்பதாக ஹமாஸ் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஹமாஸ் பேச்சாளர் மேற்படி கோரிக்கையை நேற்று விடுத்துள்ளார்.

2007 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹமாஸ், அதன் போட்டி இயக்கமான பத்தாவிடமிருந்து காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதில் இருந்து அதனை ஆட்சி செய்து வந்தது.

என்றாலும் 2023 முதல் சுமார் இரு வருடங்கள் இடம்பெற்ற போரைத் தொடர்ந்து கடந்தாண்டு ஒக்டோபரில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. அன்று முதல் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கத் தயாராக இருப்பதாக பல தடவைகள் ஹமாஸ் கூறியது.

இந்நிலையில் காசா ஊடக அலுவலகம் அரசாங்கத்தின் அவசர கமிட்டி தலைவரான மொஹமட் அல்-ஃபரா, ‘அரசாங்கத்தின் அவசரக் குழுவைக் கலைத்து, ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளைச் செயல்படுத்தி, நிர்வாக மாற்றத்தை எளிதாக்கும் வகையில், தனது பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ ராஜினாமாவைச் சமர்ப்பிக்கவும், அரசாங்க அவசரக் குழுவைக் கலைப்பதாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளார்’ என்று நேற்று முன்தினம் அறிவித்தது.

பிராந்தியத்தின் அன்றாட சிவில் விவகாரங்களுக்கு பொறுப்பான காசா நிர்வாக தேசியக் குழு கடந்த ஜனவரி முதல் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *