சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்றிரவு தங்கியிருந்த டமாஸ்கஸில் உள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் நான்கு பொலிஸார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாக சிரிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாதைகள் இழுத்து மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதி மக்ரோனின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், குண்டுகள் வெடித்த போதிலும் அவர் வெடிச்சத்தங்களைக் கேட்கவில்லை என்றும் அவர் திட்டமிட்ட படி சிறிது நேரத்திலேயே சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவை சந்தித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டமஸ்கஸ்ஸில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு எதிரே உள்ள வீதியில், சிரிய சுற்றுலா அமைச்சுக்கும் தேசிய அருங்காட்சியகத்திற்கும் இடையிலான ஒரு பரபரப்பான பகுதியில் இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
முதல் குண்டு வெடிப்பு ஜனாதிபதி மக்ரோனின் வாகனத் தொடரணி சிரிய ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அம்புலன்ஸ் ஒன்றுக்கு அருகில் மற்றைய குண்டு வெடித்தது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மக்ரோனின் தூதுக்குழுவினரும், சிரிய பாதுகாப்பு வட்டாரங்களும் ஜனாதிபதி மக்ரோன் இரவு தங்கியிருந்ததை உறுதிப்படுத்தியதோடு அவர் சிவில் சமூகக் குழுக்களை நேற்று காலையில் சந்தித்ததாகவும் கூறின.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரெஞ்சு ஜனாதிபதி, ‘முழுமையான இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கொண்ட சிரியாவில் வாழ வேண்டும் என்ற சிரியர்களின் விருப்பத்தை எதனாலும் குறைத்து மதிப்பிட முடியாது. நான் சிரியாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையுடனும் சந்தித்தேன். கண்ணியம், தைரியம் மற்றும் உறுதியைக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
2024 இல் பஷார் அல்-அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய நாடொன்றின் தலைவர் ஒருவர் சிரியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போதே இக்குண்டு வெடிப்பி சம்பவம் இடம்பெற்றுள்ளது.




