புலமைச் சொத்துரிமைச் சட்டதிற்கு முரணாக இன்ஜின் எண்ணெய் தயாரித்த இருவருக்கு பிணை

1 Min Read

புலமைச் சொத்துரிமைச் சட்டத்தை மீறி, உலகப் புகழ்பெற்ற வர்த்தக முத்திரைகளான ‘கெல்டெக்ஸ்’ (Caltex) மற்றும் ‘டெலோ’ (Delo) ஆகியவற்றின் பெயர்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , இன்ஜின் எண்ணெய் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாவனல்லை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களைப் பிணையில் விடுதலை செய்ய மாவனல்லை மற்றும் கேகாலை நீதவான் நீதிமன்றங்கள் அண்மையில் உத்தரவிட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. மாவனல்லை நீதவான் யு.எல்.டபிள்யு. அஹமட் மற்றும் கேகாலை நீதவான் மொஹமட் பயிஸ் சம்முத் ஜஹான் ஆகியோர் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு விவாதங்களையும் பரிசீலித்த பின்னரே இந்த பிணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

முறைப்பாட்டாளர் சார்பில் ‘சுதத் பெரேரா அசோசியேட்ஸ்’ நிறுவனத்தின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 2006 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் போலிப் பொருட்களை விற்பனை செய்தல், கைவசம் வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் என்பன குற்றவியல் குற்றங்களாகும் எனத் தெரிவித்தனர்.

வாகன உரிமையாளர்களை ஏமாற்றி, உலகின் முன்னணி வர்த்தக முத்திரைகளைப் போலியாகப் பயன்படுத்தி சட்டவிரோத இலாபம் ஈட்டியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

விடயங்களை ஆராய்ந்த மாவனல்லை நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், கேகாலை நீதவான் இந்த வழக்கை மீண்டும் நவம்பர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *