பிரான்ஸின் பிறப்பு விகித்தை அதிகரிக்கவென ஊதியத்துடன் கூடிய புதிய விடுமுறைத் திட்டத்தை பிரான்ஸ் நேற்று அறிமுகப்படுத்தியது.
மந்த நிலையில் காணப்படும் பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கவென தாய்க்கும் தந்தைக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் மகப் பேறின்மை என்பவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் 2024 இல் வெளியிட்டார். இத்திட்டம் பிரான்ஸின் சனத்தொகை மேம்பாட்டுக்கு உதவும் என்றும் கூறினார்.
பிரான்ஸில் முதல் குழந்தைக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை நான்கு மாதங்களுக்கும் குறைவாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம் தந்தையருக்கு பிரசவத்திற்குப் பின் 28 நாட்கள் விடுமுறை பெற உரிமை பெற்றிருந்தனர்.
நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, தாய்மாரும் தந்தையரும் தங்களுக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகளுக்கு மேலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் மேலதிகமாக விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். முதல் மாதத்தில் தங்கள் நிகர சம்பளத்தில் 70 சதவீதத்தையும், இரண்டாவது மாதத்தில் 60 சதவீதத்தையும் பெற்றோர் பெற்றுக்கொள்ளவும் இத்திட்டம் வழிவகை செய்யக்கூடியதாக உள்ளது. அரப் நியூஸ்




