தென்னாபிரிக்காவுக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்றின் மேலதிக நேரத்தில் அடித்த பரபரப்பு கோல் மூலம் கனடா அணி முதல் முறையாக 16 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்றது.
உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றை ஆரம்பித்து லொஸ் ஏஞ்சல்ஸில் இலங்கை நேரப்படி நேற்று (29) நடைபெற்ற முதலாவது போட்டியிலேயே தென்னாபிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. போட்டியின் 90 நிமிட முடிவில் இரு அணிகளும் கோல் புகுத்த தவறிய நிலையில் போட்டி இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
அதன் இரண்டாவது நிமிடத்தில் வைத்து ஸ்டீபன் யுஸ்டாக்கியோ பந்தை வேகமாக கடத்தி பெனால்டி பெட்டிக்கு அருகே வைத்து தாழ்வாக உதைத்து கோல் புகுத்தினார். இந்த கோல் கனடாவின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் அந்த அணியால் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடிந்தது.
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றாக உள்ள கனடா இதற்கு முந்தை உலகக் கிண்ண தொடர்களில் ஆடிய ஆறு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெல்லாத நிலையில் இம்முறை தொடரில் ஆரம்ப சுற்றில் கட்டாருக்கு எதிரான போட்டியை 6–0 என வென்ற நிலையிலேயே 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா அணி அடுத்து 16 அணிகள் சுற்றில் மொரோக்கோ அல்லது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. மொரோக்கோ – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான நொக் அவுட் போட்டி இன்று (30) அதிகாலை 6.30 இற்கு குவாடலஜராவில் நடைபெறவுள்ளது.




