அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக சீனா மீது குற்றச்சாட்டு

2 Min Read

‘’சீனா எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும், அது ஒருபோதும் பிற நாடுகளை அச்சுறுத்தாது; உலக ஆதிக்கத்தை ஏற்படுத்த முயலாது” என 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டோக்கியோவின் வாசிடா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) உறுதியளித்திருந்தார். சீனாவின் வளர்ச்சி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை பிராந்திய நாடுகளுக்கு உணர்த்துவதே அதன் நோக்கமாகும். ஆனால், தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையின் கீழ் அந்த வாக்குறுதி முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனாவின் தற்போதைய விரைவான அணு ஆயுதப் பெருக்கமும், ஆக்கிரமிப்பு இராணுவப் போக்கும் ஜியாங் ஜெமினின் அமைதியான கொள்கைகளில் இருந்து சீனா முற்றிலும் விலகிச் சென்றுள்ளதைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1998 இல் ஜியாங் ஜெமின் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தைவான் விவகாரம் மற்றும் வரலாற்றுப் பிணக்குகளைத் தீர்த்து, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இருதரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டது.

உலகளாவிய ஒழுங்குடன் இணைந்து கொண்டு, நேரடி மோதல்களைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலேயே அவரது தலைமை கவனம் செலுத்தியது.

சீனாவின் அணு ஆயுதக் கட்டமைப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததுடன், ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற இராணுவக் கோட்பாட்டையே சீனா பின்பற்றியது.

2020 ஆம் ஆண்டில் 200 ஆகக் காணப்பட்ட சீனாவின் பயன்பாட்டிலுள்ள அணு ஆயுதக் குண்டுகளின் எண்ணிக்கை, தற்போது 600 ஐத் தாண்டியுள்ளது. இது 2030 ஆம் ஆண்டளவில் 1,000 ஐக் கடக்கும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கணித்துள்ளது.

அதிவேக ஒலியை மிஞ்சும் ஏவுகணைகள் (Hypersonic Glide Vehicles) மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளங்களை (MIRVed missiles) சீனா வேகமாக உருவாக்கி வருகிறது.

தென் சீனக் கடல் , தாய்வான் நீரிணை மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளில் சீனாவின் அச்சுறுத்தல்மிக்க இராணுவ நடவடிக்கைகள் அண்டை நாடுகளின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

ஜியாங் ஜெமின் உலக நாடுகளுடன் இணங்கிச் செல்லும் பொருளாதாரக் கொள்கையை உள்நாட்டு பலமாகப் பயன்படுத்தினார். ஆனால், தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங், தீவிர தேசியவாதம் மற்றும் இராணுவ பலத்தின் மூலமாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்கிறார். பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய உலகளாவிய அமைதியை ஜியாங் விரும்பிய நிலையில், ஷி ஜின்பிங் தற்போதைய பன்முனைப் போட்டித்தன்மை வாய்ந்த உலகில் அணு ஆயுத பலமே நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையானது எனக் கருதுகிறார்.

சீனாவின் ‘அமைதியான எழுச்சி’ என்ற கோட்பாடு, தற்போது ‘அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்கம்’ என்ற மூலோபாயமாக மாறியுள்ளது. சீனாவின் இந்த அணு ஆயுத விரிவாக்கம் சர்வதேச அரங்கில் அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், ஆசிய பிராந்தியத்தில் புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *