பலஸ்தீன் நூறு மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவியை வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிலுள்ள பலஸ்தீன தூதரகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மனிதாபிமானப் பேரழிவு நிலையைச் சமாளிக்க இந்த மருத்துவ உதவி அவசியமானது என்றும் அந்த தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் காசா மற்றும் மேற்குக் கரையில் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன, மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், பலஸ்தீன வரி வருவாயை நிறுத்தி வைத்தல் ஆகியவை பலஸ்தீனின் மருத்துவ வசதிகள் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 19 மாத்திரமே பகுதியளவில் இயங்குகின்றன. மயக்க மருந்து, நுண்ணுயிர்க் கொல்லிகள், இன்சுலின், அறுவை சிகிச்சைக் கருவிகள் மற்றும் இரத்த அலகுகள் என்பவற்றுக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நெரிசலான முகாம்கள், சீர்குலைந்த சுகாதார வசதிகள், கழிவுகள் குவிதல், இடிபாடுகளுக்கு அடியில் கிடக்கும் சடலங்கள் ஆகியவை தொற்றுநோய்கள் பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன
அதனால் உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், டயாலிசிஸ் பொருட்கள் மற்றும் மருத்துவமனை ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறும் பலஸ்தீன் கேட்டுள்ளது.




