ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தங்களின் முக்கிய விநியோக மூலங்களைப் பல்வகைப்படுத்த வலியுறுத்தும் புதியதொரு சட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகளாவிய பேரண்டப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளுடன் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் உரையாடலில் ஈடுபட வேண்டும். வணிகங்கள் மிகவும் மெதுவான வேகத்தில் இடர்களைக் குறைத்து வருவதால், பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையை ஆணையக்குழு முன்மொழிய உள்ளது. நிறுவனங்கள் இடர் குறைப்பு முயற்சிகளை முடுக்கிவிட்டால், இந்நடவடிக்கை தேவையற்றதாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரிய கனிமங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், முக்கிய கனிமங்களைப் பதப்படுத்துவதில் தனது ஆதிக்கத்தை சீனா பயன்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




