ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

5 Min Read

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைக்குள், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமான சமூகம் மற்றும் சமநிலையான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வளர்ச்சிப் கட்டமைப்பிற்குள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) கொள்கைகளுக்கு இணங்க, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு இலங்கை தற்போது தீவிரமாகப் பங்களித்து வருகின்றது.

இத்திட்டத்திற்கு இணங்க, 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வையொட்டி மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் முன்னணி அரச, தனியார் மற்றும் தொண்டர் அமைப்புகளின் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும், இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வை முன்னிட்டு ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 வனங்கள், வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வும் இதன் போது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

மேம்படுத்தப்பட்ட தேசிய பசுமை அறிக்கை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துதல், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் மாகம மணல் மேட்டுப் பகுதியை ஒரு பாதிப்புக்குள்ளாகும் பிரதேசமாகப் பிரகடனப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் யானை வழித்தடங்களை விடுவித்தல், ‘குடா புபுல’ நீர் ஊற்று மற்றும் ‘கபுரெல்ல’ வெந்நீர் சதுப்புநிலப் பகுதி ஆகியவற்றை வன ஒதுக்கீடுகளாகப் பிரகடனப்படுத்துதலும் இங்கு இடம்பெற்றன.

“சொபா” சுற்றுச்சூழல் சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பதிப்பு, “சொபா கெத” சுற்றுச்சூழல் சஞ்சிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நூல் வெளியீடும் இதன்போது நடைபெற்றது.

இம்முறை தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு, பூச்சிய கார்பன் உமிழ்வு திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

காலநிலை மாற்றப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கும், உலக சுற்றாடல் தினக் கருப்பொருளின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட சூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி,

”ஐக்கிய நாடுகள் சபையினால் உலக சுற்றாடல் தினம் 1972 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் இரண்டாவது உலக சுற்றாடல் தினத்தை இன்று நாம் நடத்துகிறோம். நாம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து, இந்த உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐந்து காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவித்துள்ளோம். அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல வன ஒதுக்கீடு, கோன்கெட்டியாவ வன ஒதுக்கீடு மற்றும் கல்லஞ்சிய ஆகிய ஐந்து காடுகளே, எம்மால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ் இவ்வாறு பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. நாம் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்துவதை 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில் இருந்தே தொடங்கினோம். அன்று நாங்கள் நில்கல, கொட்டவ, துல்ஹிரி கந்த, வேரஹெர மற்றும் உடலியத்த ஆகிய காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவித்தோம்.

நாங்கள் கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி ‘வனஸ்பதி’ திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம். சுற்றாடல் அமைச்சு என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு திணைக்களம் என்ற ரீதியிலும் 2025 ஆம் ஆண்டில் 29 காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பிரகடனப்படுத்த முடிந்தது. 2026 ஆம் ஆண்டு உலக வன தினத்தில், அம்பாறை, நுவரெலியா, பதுளை உள்ளடங்கலாக நான்கு மாவட்டங்களை முதன்மைப்படுத்தி மேலும் 50 காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டன. இதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற ‘எஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்திற்கு இணையாக மேலும் இரண்டு காடுகள் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக மாற்றப்பட்டன. இன்று பிரகடனப்படுத்தப்பட்ட ஐந்து காடுகளுடன் சேர்த்து, ஒரு வருடத்திற்குள் 86 காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பிரகடனப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இது மாபெரும் வெற்றி என்பதைக் கூற வேண்டும்.

யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்காக நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். யானைகளின் வாழ்விடங்கள் ஊடாக அவை பயணிப்பதற்கான வழிகளைத் திறந்து கொடுப்பதே எங்களது ஒரு கனவாக இருந்தது. ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் மூன்று யானை நடைபாதைகளை திறப்பதற்கு இன்று எங்களால் முடிந்துள்ளது. இவ்வாறான யானை நடைபாதைகளைத் திறப்பதற்கும், யானை முகாமைத்துவ பகுதிகளை உருவாக்குவதற்கும் கடந்த காலத்தில் நாங்கள் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினோம். சில வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை யானை முகாமைத்துவப் பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதற்குரிய சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையானதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் அதற்கான சட்ட விதிமுறைகளை வர்த்தமானி மூலம் அறிவித்து, செயல்பாட்டுக் குழுவொன்றை நியமித்து, தற்போது பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

இப்பணிகளை முன்னெடுக்கும் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வளப்பாதுகாப்பு திணைக்களம் போன்ற நிறுவனங்களில் மனிதவள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை நிலவுவதை நாங்கள் அவதானித்தோம். அதற்குத் தீர்வாக, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களது பணிகளைச் செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள், கை டிராக்டர்கள் மற்றும் கெப் ரக வாகனங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

வளர்ப்பு யானைகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஒரு கொள்கையைத் தயாரிக்கும் பணிகளை நாங்கள் தற்போது ஆரம்பித்துள்ளோம். அதேபோல், நமது நாட்டில் ஒரு குறையாகக் காணப்படும் யானைகள் இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி மையமாக பின்னவல யானைகள் சரணாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றாடலைப் பாதுகாப்பதில் இந்நாட்டில் உள்ள சட்டவிதிகள் காலாவதியானவை. அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கும் நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயகொடி, சுற்றாடல் அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.எல்.ஆர்.பி. மாரசிங்க ஆகியோருடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *