இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி நேற்று (03) இங்கிலாந்தை நோக்கி பயணமானது.
இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீராங்கனை ஷஷினி கிம்ஹானி உபாதை காரணமாக அணியில் இருந்து வெளியேறியதால் கடைசி நேர மாற்றத்துடனேயே இலங்கை அணி தனது பயணத்தை ஆரம்பித்தது. 17 வயது கிம்ஹானிக்கு பதில் வேகப்பந்து வீராங்கனை சேதனா விமுக்தி அணியில் சேர்க்கப்பட்டார்.
எதிர்வரும் ஜூன் 12 தொடக்கம் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாக அணித் தலைவி அத்தபத்து இங்கிலாந்து பயணிப்பதற்கு முன்னர் கொழும்பில், நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
‘இங்கிலாந்தில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளம் உள்ளது. அனைத்து போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெறப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரில் அனைத்து வீராங்கனைகளும் சிறந்த முறையில் ஆட வேண்டும். 4 வேகப்பந்து வீராங்கனைகள் அணியில் உள்ளனர். நாம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை தோற்கடிக்க வேண்டும். எமது புதிய பயிற்சியாளர் அதிக நம்பிக்கையுடன் இருப்பவர். அவர் துடுப்பாட்டக்காரர்களுக்கு சுதந்திரம் அளித்திருக்கிறார். அந்த மாற்றத்துடன் எமக்கு சிறந்த போட்டி ஒன்றை கொடுக்க முடியுமாக இருக்கும்’ என்று சமரி அத்தபத்து தெரிவித்தார்.
பன்னிரண்டு அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணி பி குழுவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகளுடன் இடம்பெற்றுள்ளது. ஜூன் 12 ஆம் திகதி பெர்மிங்ஹாமில் நடைபெறும் ஆரம்பப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்று முடிவில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.



