மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் புதிய தேர்வுக் குழு மாற்றங்கள் செய்திருப்பதாக முன்னாள் தேர்வுக் குழு தலைவர் பிரோமத்ய விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான குழாம்களில் தலா 15 வீரர்களே தேர்வு செய்யப்பட்டிருந்ததாக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் அண்மையில் நியமிக்கப்பட்ட கபில விஜேகுணவர்தன தலைமையிலான குழு அதில் மாற்றங்கள் செய்திருப்பதாக கூறியுள்ளார்.
இதில் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் குழாத்தில் 17 வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு ஒருநாள் குழாத்தில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 15 பேர் கொண்ட டி20 குழாத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் குழாத்துக்கு வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்தவை தமது குழு தேர்வு செய்யவில்லை என்று விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எதிர்காலம் மற்றும் எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு ஒருநாள் அணியின் உப தலைவராக சுழற்பந்து சகலதுறை வீரர் துனித் வெள்ளாலகேவை நியமித்தபோதும் அவருக்கு பதில் உப தலைமை பொறுப்பு கமிந்து மெண்டிஸுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
இதில் பினுர பெர்னாண்டோ மற்றும் நுவன் துஷார இருவரையும் டி20 குழாத்தில் சேர்த்தது எந்த அடிப்படையில் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக நுவன் துஷார தொடர்பில் இருக்கும் உடல் தகுதி பிரச்சினை பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



