2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்திருக்கும் ‘ஒலிம்பிக் திட்ட’ பயிற்சி நிழ்ச்சியின் கீழ் ரக்பி செவன்ஸ் குழாத்தின் வீரர் ஒருவருக்கு 135,000 ரூபா வீதம் 21 வீரர்களுக்கு மாதத்திற்கு 29 இலட்சம் ரூபா வரை கொடுப்பனவை விளையாட்டுத் துறை அமைச்சு வழங்குகிறது.
அண்மையில் முடிவுற்ற மத்திய ஆசிய ரக்பி போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை ரக்பி செவன்ஸ் குழாத்தை மேலும் பலப்படுத்தி இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் படுத்துவது இதன் நோக்கமாகும்.
மத்திய ஆசிய ரக்பி போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற ரக்பி வீராங்கனைகளை வலுவூட்டும் வகையில் ஒரு வீராங்கனைக்கு 180,000 ரூபா வீதம் 16 வீராங்கனைகளுக்கு இருபத்து எட்டு இலட்சத்து எண்பதாயிரம் தொகை வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் கருத்திட்டத்திற்கு அமைய விளையாட்டுத் துறை அமைச்சு முன்னெடுத்திருக்கும் ‘ஒலிம்பிக் திட்டத்தின்’ கீழ் ரக்பி வீர, வீராங்கனைகளுக்கு டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் பணப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது. இந்த ஆண்டில் விளையாட்டு சங்கங்களின் கீழ் செயற்படும் தேசிய அணிகளின் வீர, வீராங்கனைகளை வலுவூட்டி, மருந்து மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டார்.
‘நாம் வசதிகளை பெற்றுக்கொடுக்கும்போது வீர, வீராங்கனைகள் உச்ச திறமையை வெளிப்படுத்த வேண்டும். வீர, வீராங்கனைகளுக்கு பணம் கொடுத்து நாம் கண்காட்சி நடத்துவதில்லை. இந்த அணிகளில் இருக்கின்ற வீரர்கள் வழங்கும் பணத்தில் விளையாட்டு வசதிகள் மற்றும் ஊட்டச்சத்தை உச்சத்தில் வைத்திருப்பதற்கு முடியும்.
பாதணி இல்லை என்று தொலைக்காட்சிக்கு முன் இதன் பின்னர் அழுவதற்கு தேவையில்லை. வேலை இல்லாத வீரர்களுக்கு அரசு வேலையை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளேன். அவர்களை பாதுகாப்பதற்கு தேவையான பணிகளை மேற்கொள்வது எமது பொறுப்பாகும். நாட்டுக்கு புகழை தேடித் தருவது உங்கள் பொறுப்பு’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
‘ஒலிம்பிக் திட்ட’ பயிற்சி நிகழ்ச்சியின் கீழ் வீர, வீராங்கனைகள் 4 குழுக்களின் கீழ் வகைப்படுத்தி இருப்பதோடு, பயிற்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அவ்வப்போது கேட்டறிவதும் விசேட அம்சமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் 146 பேர் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்காக மாதத்திற்கு 3 கோடி ரூபா அளவு தொகை வழங்கப்படுவதோடு, அவர்களின் தேவை, பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துக்காக இந்தப் பணத்தை பயன்படுத்த ஆலோசனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மெய்வல்லுனர், பெட்மின்டன், குத்துச்சண்டை, கொல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ரக்பி, துப்பாக்கி சுடுதல், ஸ்கொஷ், பளுதூக்கல், மல்யுத்தம் மற்றும் பராலிம்பிக் ஆகிய 12 விளையாட்டுகளின் வீர, வீராங்கனைகள் இணைக்கப்பட்டு இந்த கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



