பிரின்ஸ் குணசேகர
மூன்று தசாப்தங்களின் பின்னர் தெற்காசிய கால்பந்து சம்பியன்சிப் கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இலங்கை அணிக்கு இருப்பதால், இலங்கை கால்பந்து சம்மேளனம் ‘Win SAFF Again’ ஊக்குவிப்பு திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்துள்ளது. கடைசியாக இலங்கை 1995 இல் தனது ஒரே சாஃப் கிண்ணத்தை வென்றதோடு, அது தொடக்கம் அந்தக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் சாஃப் சம்பியன்சிப் கால்பந்து போட்டி பங்களாதேஷில் நடைபெறவுள்ள நிலையில், முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பு அணியிடம் இருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் இலங்கை கால்பந்து அணி குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தி இருப்பதோடு, தெற்காசியாவின் அதிக முன்னேற்றம் கண்ட கால்பந்து அணியாக மாறியுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் 207 ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமையை அடுத்து 11 ஆண்டுகளின் பின்னர் 191 ஆவது இடம் வரை முன்னேற்றம் கண்டுள்ளது.
‘தெற்காசிய கால்பந்து சம்பியன் கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்தப் பயணத்தை குழப்பும் சதி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அதனை தோற்கடிப்போம். கால்பந்து விளையாட்டை சீர்குலைப்பதற்கு செய்யும் அந்த நயவஞ்சகர்களுக்கு இலங்கை கால்பந்து ஆரம்பித்திருக்கும் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது’ என்று உமர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் ஆடும் இலங்கை வீரர்கள் அழைத்து வந்து தேசிய கால்பந்து அணிக்கு வலுச் சேர்த்த நடைமுறையை தற்போது பல தெற்காசிய நாடுகளும் பின்பற்றும் போக்காக மாறியுள்ளது. பங்களாதேஷ் அண்மையில் இங்கிலாந்தில் ஆடும் ஹம்சா சவுத்ரியை தேசிய அணிக்கு இணைத்ததோடு, இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளமும் உலகெங்கும் உள்ள தமது நாட்டு வீரர்களை தேடி வருகின்றன.
‘இலங்கை கால்பந்து அணியில் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக ஒருசிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தேசிய அணியில் ஒரு வெளிநாட்டு வீரர்கள் கூட இல்லை என்று நான் உறுதி செய்கிறேன். அவர்கள் அனைவரும் இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட இலங்கை கடவுச்சீட்டு உள்ள வீரர்கள்’ என்றும் உமர் குறிப்பிட்டார்.



