நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை மகளிர் ஏ அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது. எனினும் இலங்கை மகளிர்கள் இந்தத் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய நிலையில் தொடரை 2–1 என கைப்பற்றியது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 16.5 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கே சுருண்டது. அணித் தலைவி சத்யா சந்தீபனி 23 பந்துகளில் ஒரு பௌண்டரியுடன் பெற்ற 16 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் மூன்று வீராங்கனைகளே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சுழல் வீராங்கனை ஜேஸ் வட்கின் 2.5 ஓவர்களில் 4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு இலங்கை வீராங்கனைகள் நெருக்கடி கொடுத்தபோதும் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு 79 ஓட்டங்களாக இருந்ததால் அந்த அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து மேற்படி இலக்கை எட்டியது. ப்ரூ கட்டன் 38 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது பெற்ற 30 ஓட்டங்களும் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.
இலங்கை ஏ அணிக்காக சச்சினி நிசன்சலா மற்றும் பிரமுதி மத்சரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து மகளிர் ஏ அணி முன்னதாக நடந்த முன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1–0 என வென்ற நிலையிலேயே இலங்கை மகளிர்கள் டி20 தொடரை கைப்பற்றியுள்ளனர்.



